Thursday, July 16, 2009

வான் மழை நீர் நம் உயிர் நீர்

வான் மழை நீர் நம் உயிர் நீர்
ஒரு ஊரில் ரங்கன் என்று ஒரு விவசாயி இருந்து வந்தான். அவன் கடுமையான உழைப்பாளி.  அவனுடைய நிலத்தில் மிகவும் ஆழமான கிணறு இருந்தது. அவன் அந்த கிணற்றில் வான் மழை நீரையும் சேகரித்தான். அதெற்கென சற்று பணம் செலவழித்து வீட்டு கூரை மேல் விழும் நீரையும் குழாய் வழியாக கிணறு சென்று சேருமாறு அமைத்து இருந்தான்.

ஊர் மக்களையும் அவ்வாறு செய்யுமாறு சொன்னான். அவர்களோ எதற்கு வீண் செலவு என்று அந்த மாதிரி அமைக்காமல் விட்டனர்.
அவனுடைய ஊரில் வறட்சி ஏற்பட்டது. எனவே அந்த ஊர் மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டனர். ஊரில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து அரசனிடம் உதவி கேட்போம் என்று முடிவு எடுத்தார்கள்.

அரசன் அவர்களை அழைத்து உங்கள் ஊரில் பருவகாலத்தில் மழை பெய்ததா என்று வினவினான். மக்களும் பெய்தது என்று சொன்னனர். பின்னர் ஏனிந்த வறட்சி என்று கேட்டான் அரசன். ஊர் மக்கள், கடும் வெயிலினால் கிணறுகள் வற்றி விட்டதாக கூறினார்.

மழை நீரை நீங்கள் கிணற்றில் சேமிப்பது இல்லையா என்று கேட்டான் அரசன். மக்கள் தாங்கள் இதுவரை மழை நீரை சேமித்து வைத்தது  இல்லை என்றனர். அரசன் அவர்களிடம் " வான் மழை நீர் தான் நம் உயிர் காக்கும் நீர்" நீங்கள் அன்று உங்கள் கிணறுகளில் மழை நீரை சேமித்து இருந்திருந்தால் இன்று இந்த தண்ணீர்ப் பஞ்சமே வந்திருக்காது. 

இனிமேல் நீரின் அவசியத்தை உணர்ந்து சேமியுங்கள். உங்கள் ஊரில் உள்ள ரங்கன் என்னும் விவசாயியின் தோட்டத்தில் உள்ள கிணற்றில் நிறைய மழை நீரை சேமித்துள்ளார். அவர் சேமித்துள்ள மழை நீரில் இருந்து உங்கள் ஊரில் அனைவரின்  பயன்பாட்டுக்கும் தருவதாகக்  கூறி உள்ளார்.  இனிமேல் மழை பெய்தால்  சேமிக்க மறக்காதீர்கள் என்று அறிவுரை கூறினான் அரசன்.

மக்களும் அதை உணர்ந்து அரசனுக்கும், ரங்கனுக்கும் நன்றி கூறி ஊர் திரும்பினர். அன்று முதல் அவர்களும் மழை நீரை சேமிக்க தொடங்கினார்கள்.

நீதி : சிறு துளி பெரும் வெள்ளம். வான் மழை நீர் நம் உயிர் நீர். அதை காப்போம்!

No comments:

Post a Comment