Tuesday, November 6, 2012

ஆணி வைத்தியம்


ஆணி வைத்தியம் 


ஒரு ஊருக்கு ஒரு துறவி விஜயம் செய்தார். அங்கே இருந்த பணக்காரர் ஒருவர் அவரை தம் வீட்டிற்கு அழைத்து வரவேற்றார். பின்னர் அவரிடம் தம் குறையை வெளிப்படுத்தினார்.

"சுவாமி, எனக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது. கோபத்தைக் கட்டுப்படுத்த என்ன வழி?" என்று கேட்டார் பணக்காரர். " உங்கள் வீட்டில் உங்களுக்கு மிகவும் பிடித்த அறை எது? என்று கேட்டார் துறவி . பணக்காரர்  தனக்கு மிகவும் பிடித்தமான அறை தம் வீட்டின் வரவேற்பறை என்று கூறினார். அங்கே தான் அழகிய கலைப்பொருள்கள் வைக்கப்பட்டு இருந்தன. அது மிகவும் அழகிய அறைதான்.

பின்னர் துறவி அவர் மனைவியிடம் திரும்பி, இவர் ஒவ்வொரு தடவை கோபப்படும்போது இந்த அறையின் சுவற்றில் ஒரு ஆணியை அடித்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து நான் வந்து பார்க்கிறேன் என்று கூறி விடை பெற்றுச்  சென்றார்.

"என்ன இது? துறவி நம் வீட்டு வரவேற்பறையில்  ஆணி அடிக்க சொல்கிறார்!" என்று கோபமாக சொன்னார் பணக்காரர். அவர் மனைவி முதல் ஆணியை எடுத்து சுவற்றில் அடித்தார்.

அன்று முழுவதும் அந்த பணக்காரர்  கோபப்பட்டபோதெல்லாம் ஆணி அடித்தார் அவர் மனைவி, மொத்தம் பதினான்கு ஆணிகள். மறுநாளும் அவர் கோபப்பட்டபோதெல்லாம் ஆணி அடிக்கப்பட்டது. இரண்டாம் நாளின் முடிவில் பத்து ஆணிகள். மூன்றாம் நாளில் ஆறு ஆணிகள். நான்காம் நாள் சுவற்றில் ஒரு கோடு போல விரிசல் விட்டது.  

இனிமேல்  அந்த சுவற்றில் ஆணி அடித்தால்  சுவற்றில் பெரிய விரிசல் விழுந்து சுவர் முற்றிலும் பாழாகிவிடும். கோபப்படாமல் இருந்தால் தான் சுவற்றில் ஆணி அடிக்கப்பட மாட்டாது. சுவற்றைப் பாழ்படுத்த விரும்பாத பணக்காரர், கோபப்படாமல் அமைதியாக இருக்க ஆரம்பித்தார். நான்காம் நாள் முடிவில் ஆணி அடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மெல்ல மெல்ல அவர் மனம் அமைதியை விரும்பியது. கோபம் குறைந்தது. வார முடிவில் துறவி வந்து பார்த்த போது, பணக்காரர் முகத்தில் பணிவும், அமைதியும் குடி கொண்டு இருந்தது. ஆணி வைத்தியம் நன்றாகவே வேலை செய்துவிட்டது என்று உணர்ந்த துறவி பணக்காரருக்கும் , அவர் மனைவிக்கும் ஆசி வழங்கி விடை பெற்றார்.

நீதி: சிறு சிறு ஆணிகள் சுவற்றில் விரிசல்களை  உண்டாக்கிப் பாழ்படுத்துவதைப் போல சிறு சிறு விஷயங்களுக்கும் கோபம் கொள்வது மனதில் விரிசல்கள் உண்டாக்கி வாழ்வைப் பாழ்படுத்தி விடும்.